தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்ட நிதி விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

0
79

தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை கட்டுவதற்கான நிதி ஆதாரங்கள், கட்டுமான அனுமதி போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை இருவார காலத்தில் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படுவதை எதிர்த்து ஆலய வழிபாட்டாளர் சங்கத் தலைவரும், இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகியுமான மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, கடந்த 2021-ல் தமிழகத்தில் உள்ள முக்கியமான 16 கோயில்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டப்படும் என பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஒருகோயிலுக்கு சொந்தமான நிலத்தில், அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அந்த கோயில் நிதியில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் கட்டினால் சரியானதுதான். ஆனால், ஒரு கோயில் நிலத்தில் திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் கட்ட, வேறொரு கோயில் உபரி நிதியை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. இது அறநிலையத்துறை விதிகளுக்குப் புறம்பானது. கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தங்கும் விடுதி, திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தொகுதி எம்எல்ஏ உத்தரவின்பேரில் அங்கு கட்டாமல் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ உத்தரவுக்குட்பட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படுவது சட்டவிரோதமானது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் எம்எல்ஏ ஒரு கோயில் நிதியை மற்றொரு கோயிலுக்கு மாற்ற உத்தரவிட்டார் என கேள்வி எழுப்பினர்.

அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு ப்ளீடர் அருண்நடராஜன், திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டும் விவகாரத்தில், மனுதாரர் குறிப்பிடும் எம்எல்ஏ கோரிக்கை மட்டுமே விடுத்தார். அவர் துறை அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதிகாரிகளை யாரும் தவறாக வழிநடத்தவும் இல்லை. பக்தர்களின் வசதிக்காகவே திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி போன்றவை கட்டப்படுகிறது. அனைத்து முன்அனுமதியும் பெற்றபிறகே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 16 கோயில்களிலும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை கட்டுவதற்கான நிதி ஆதாரங்கள், ஒரு கோயில் நிதி மற்றொரு கோயிலுக்குப் பயன்படுத்தப்படுவது, கட்டுமான அனுமதி போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை அறநிலையத்துறை அதிகாரிகள் இருவார காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.