Home விளையாட்டு செய்திகள் ஜெர்மனியை வெளியேற்றிய பராகுவே; ஜப்பானை வீழ்த்திய ‘பிரில்லியண்ட்’ பிரேசில் | FIFA WC 2026

ஜெர்மனியை வெளியேற்றிய பராகுவே; ஜப்பானை வீழ்த்திய ‘பிரில்லியண்ட்’ பிரேசில் | FIFA WC 2026

0

நடப்பு ஃபிபா உலகக் கோப்பையின் 19-வது போட்டி நாளில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் ஆட்டங்கள் ரசிகர்களுக்கு பரபரப்பான தருணங்களை வழங்கின. பிரேசில் ஜப்பானை 2-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஜெர்மனி பெனால்டி ஷூட் அவுட்டில் பராகுவேயிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி வெளியேற்றத்தை சந்தித்தது.

பராகுவே 1 (4) – 1 (3) ஜெர்மனி: கோல்கீப்பர் கில் நாயகன்

ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகளுக்கிடையேயான ஆட்டம் 120 நிமிடங்களின் முடிவில் 1-1 என சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு ஆட்டம் சென்றது. இது உண்மையில் கத்தி முனைதான். எவ்வளவு பெரிய அணியும் இதில் காலியாகும். அப்படித்தான் ஆனது ஜெர்மனியின் கதை.

முதல் பாதியின் இறுதியில், ஜூலியோ என்சிசோவின் முயற்சியால் கிடைத்த கார்னரில், மாதியாஸ் கலார்சா அளித்த துல்லியமான கிராஸை ஹெட்டராக மாற்றிய என்சிசோ, 42-வது நிமிடத்தில் பராகுவேவை முன்னிலை பெறச் செய்தார்.

இரண்டாம் பாதியில் தீவிரமாக களமிறங்கிய ஜெர்மனி, 54-வது நிமிடத்தில் ஃப்ளோரியன் விர்ட்ஸ் அளித்த கிராஸை கை ஹாவெர்ட்ஸ் அழகான ஹெட்டர் மூலம் கோலாக்கி சமநிலையை ஏற்படுத்தினார்.

அதன்பின் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின. கூடுதல் நேரத்தின் இறுதியில் ஜோனதன் தாஹ் அடித்த கோல் விஏஆர் பரிசோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில்லின் பாதையை ஆண்டன் ஸ்டாக் மறித்ததாக நடுவர் தீர்ப்பளித்தார்.

பெனால்டி ஷூட் அவுட்டில் பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் அபாரமாக செயல்பட்டார். கை ஹாவெர்ட்ஸ் மற்றும் நிக் வோல்டமேடே எடுத்த பெனால்டிகளை அவர் தடுத்தார். மேலும் ஜோனதன் தாஹ் தனது முயற்சியை வானுக்கு பறக்கவிட்டார். இறுதியில் ஜோசே கனாலே தனது பெனால்டியை வெற்றிகரமாக மாற்றி, பராகுவேவுக்கு 4-3 என்ற ஷூட் அவுட் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியுடன் பராகுவே, ரவுண்ட் ஆஃப் 16-ல் பிரான்ஸ் – ஸ்வீடன் ஆட்டத்தில் வெல்லும் அணியை எதிர்கொள்ள உள்ளது.

பிரேசில் 2 – 1 ஜப்பான்: மார்டினெல்லியின் தாமத கோல் காப்பாற்றியது

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில், ஜப்பானுக்கு எதிராக கடுமையாக போராடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

29-வது நிமிடத்தில் பிரேசிலின் தவறான பாஸை படார் எனத் திரும்பி இடையூறு செய்து பந்தைப் பெற்ற ஜப்பான் மின்னல் வீரர் கைஷு சானோ, மத்தியப்பகுதியில் வேகமாக முன்னேறி காசெமிரோவை பின்னுக்குத் தள்ளினார். பின்னர் பாக்சிற்கு வெகுவெளியே இருந்து அடித்த சக்திவாய்ந்த ஷாட் கோலாக மாறி, ஜப்பானை முன்னிலைப் படுத்த பிரேசில் அதிர்ச்சியடைந்தது.

இந்த கோல், ஆசிய அணியிடம் தோல்வியைச் சந்திக்கும் அபாயத்தை பிரேசிலுக்கு உருவாக்கியது. ஆனால், இரண்டாம் பாதியில் பிரேசில் முற்றிலும் மாறுபட்ட அணியாக களமிறங்கியது.

காயமடைந்த மாதியஸ் குன்யாவுக்கு பதிலாக இளம் நட்சத்திரம் என்ட்ரிக் களமிறங்கியதும் தாக்குதல் ஆட்டம் வேகமெடுத்தது. 56-வது நிமிடத்தில் காப்ரியல் மகலய்ஸ் அளித்த சிறப்பான கிராஸை காசெமிரோ துல்லியமான ஹெட்டராக மாற்றி சமநிலையை ஏற்படுத்தினார். அங்கு காசெமிரோ அட்டாக்கிங் நிலையில் இருந்தது ஆச்சரியம் தான். ஏனெனில் இடைவேளைக்கு முன் காசெமிரோ ஆட்டத்திலேயே இல்லை. மிக மெதுவாகவே ஆடிக்கொண்டிருந்தார்.

அதன்பின் பிரேசில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. குறிப்பாக வினிசியஸ் ஜூனியர் இரண்டு ஜப்பான் வீரர்களுகுப் போக்குக் காட்டி பாய்ந்தோடி அடித்த ஷாட்டை கோல்கீப்பர் சியோன் சுசுகி அற்புதமாக தடுத்து கம்பத்தில் மோதி வெளியேறச் செய்தார்.

இறுதியில் ஸ்டாப்பேஜ் டைமில் 90+ 5-வது நிமிடத்தில் பிருனோ கிமராய்ஸ் அளித்த பாஸை பெற்ற கேப்ரியல் மார்டினெல்லி, பெனால்டி பகுதியின் அருகில் அமைதியாக பந்தை கட்டுப்படுத்தி தூரக் கம்பத்தை நோக்கி துல்லியமாக அடித்து வெற்றிக் கோலை பதிவு செய்தார். பந்து கோல் போஸ்ட்டில் பட்டு கோலுக்குள் சென்றது. இது ஆட்டம் முடியும் தருவாயில் கோலாக மாறி பிரேசிலுக்கு முன்னிலை அளித்ததால் ஜப்பானால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த வெற்றியின் மூலம் பிரேசில், ரவுண்ட் ஆஃப் 16-ல் ஐவரி கோஸ்ட் – நார்வே ஆட்டத்தின் வெற்றியாளரை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version