மவுண்ட் மவுங்கனியில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, இந்திய அணியை பந்தாடியது. 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மாபெரும் தோல்வி கண்டது. இந்திய அணியின் ஒருநாள் தோல்விகளில் இது 2-வது பெரிய தோல்வியாகும்.
கடந்த 11 ஒருநாள் தொடர்களை நியூஸிலாந்து அணி தன் சொந்த மண்ணில் தோற்கவில்லை. இந்தத் தொடரில் இந்திய அணி அதை முறியடிக்கும் என்று பார்த்தால், இப்போது தொடரை நியூஸிலாந்து அணி சமன் செய்ய வாய்ப்பு உள்ளதால் அவர்களது தோல்வியுறா தொடர்ச்சி நீடிக்கவே செய்யும் என்று தெரிகிறது.
2000-ம் ஆண்டு ஷார்ஜாவில் 300 ரன்கள் இலக்கை விரட்டி 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 245 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததுதான் இந்திய அணியின் மாபெரும் தோல்வி. இப்போது நேற்று மவுண்ட் மவுங்கனியில் நியூஸிலாந்து 333 ரன்கள் விளாசிய அதே பிட்சில் இந்தியா 89 ரன்களில் ஆல் அவுட் ஆகி 244 ரன்களில் படுதோல்வி கண்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பயிற்சி தேவை என்று ஷுப்மன் கில் உள்ளிட்ட சில வீரர்கள் செல்ல உண்மையில் டெஸ்ட் தயாரிப்புக்கு நேற்றைய மேட் ஹென்றியின் பந்து வீச்சை சந்தித்திருந்தாலே போதும். உலக கிரிக்கெட் வரலாற்றில் கிரேட் முதல் ஓவர்கள் பட்டியல் ஒன்றை எடுத்தால் மேட் ஹென்றியின் இந்த ஸ்பெல்லும் கட்டாயம் இடம்பெறும்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரை முதல் ஓவரிலேயே காலி செய்து முதுகெலும்பை உடைத்து விட்டார்.
இதில் பெரிய வேதனை என்னவெனில் நியூஸிலாந்தின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 85 ரன்கள், 4-வது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஃபின் ஆலன் மற்றும் வில் யங்குக்கும் இடையே 10 ஓவர்களில் 90 ரன்கள், இத்தகைய பிட்சில் இந்திய அணி வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட் என்பதுதான்.
ரோஹித் சர்மா உலகக் கோப்பைக்கு தேவையா?
நேற்று ஸ்லிப்பில் நின்று கொண்டு படாதபாடு பட்டு அணியில் தேர்வான காஷ்மீர் பவுலர் ஆகிப் நபி உயிரைக்கொடுத்து வீச நியூஸிலாந்து தொடக்க வீரர் வில் யங்கின் மட்டை விளிம்பை தன் ஸ்விங்கினால் இருமுறை தொடச் செய்த போதும் ஒருமுறை ரோஹித் சர்மாவும் மறுமுறை பெரிய கிளவ் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் கேட்சை விட, அவர் 125 ரன்கள் விளாசித்தள்ளியதுதான் நியூஸிலாந்து வெற்றியின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
பங்கஜ் சிங் என்ற ஒரு நல்ல பவுலரின் கரியரையே ரவீந்திர ஜடேஜா அழித்தார். அலிஸ்டர் குக்கிற்கு இவர் பந்தில் அவரது அறிமுக டெஸ்டில் கேட்சை விட குக் பெரிய சதமெடுக்க 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு நன்றாக வீசியும் பங்கஜ் சிங் ஒரு விக்கெட்டுடன் முடிய டெஸ்ட் வாழ்க்கையும் முடிந்து போனது. இதெல்லாம் பாவகாரியம். ஒரு பவுலரின் வாழ்க்கையை அழிக்கக் கூடாது இப்படிக் கேட்சை விட்டு.
சரி, கேட்சை விட்டு அதனால் மேட்சை விட வேண்டாம் என்றால் அவர் என்ன செய்திருக்க வேண்டும், பேட்டிங்கில் இலக்கை சேஸ் செய்ய நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வயதான அவரது கால் நகர்வும் கண்பார்வையும் என்ன செய்தது. மேட் ஹென்றி ஒரு பந்தை எகிறச் செய்ய ரோஹித் அப்படியே தன் உடலை ஸ்கொயராகத் திருப்ப வேண்டியிருந்தது. பந்து தன் போக்கில் மட்டையின் உயர் விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது.
டெஸ்ட் போட்டிகளில் இப்படித்தான் அவர் தட்டுத்தடுமாறி வந்தார். ஒருவழியாக அதிலிருந்து ரிட்டையர்ட் ஆகி அவரது பேட்டிங் கொடுமையிலிருந்து நம்மையெல்லாம் காப்பாற்றினார். இப்போது ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அபார வீரர்கள் கதவையடைத்துக் கொண்டு ஒருநாள் அணியில் பிடிவாதமாக 2027 உலகக் கோப்பை வரை இருந்து நம் கழுத்தை அறுக்கப் போகிறார் ரோஹித். உண்மையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பவர்ஃபுல் நபராக இருந்தால் ரோஹித் சர்மாவை ‘டிராப்’ செய்ய வேண்டும்.
மூன்று வடிவ வீரர் ஜெய்ஸ்வாலை ரோஹித் சர்மாவுக்குப் பதில் இறக்க வேண்டும். இதுதான் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஸ்ரேயஸ் அய்யர் மறக்க வேண்டிய சாதனை
அதேபோல் ஸ்ரேயஸ் அய்யர் இந்த ஃபார்மேட்டுக்குத் தேவையில்லை. நேற்று முதல் பந்திலேயே அவர் ‘கோல்டன் டக்’ அடித்து வெளியேறியது, இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தன் முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன்சி செய்யும் கேப்டன் கோல்டன் டக் அடிப்பது இதுவே முதல் முறை. இந்த தேவையற்ற சாதனைக்கு ஸ்ரேயஸ் அய்யர் சொந்தக்காரர் ஆனார்.
அவருக்குப் பதில் ரிஷப் பண்ட் தான் அங்கு இருக்க வேண்டும், அல்லது தேவ்தத் படிக்கல்லைக் கொண்டு வர வேண்டும். அதே போல் குல்தீப் யாதவ் பவுலிங் முடிந்து விட்டது. ஒவ்வொரு முறையும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் போது இப்போதெல்லாம் செம சாத்து வாங்குகிறார். நேற்று 3 ஓவர்களிலேயே அவர் 40 ரன்களை வாரி வழங்கினார்.
சூப்பர் ஸ்டார்கள் நிரம்பிய இந்திய அணியின் மாவீரர்கள் மேட் ஹென்றியை ஒரு சிங்கிள் எடுக்க 17 பந்துகள் ஆயிற்று. மறுமுனையில் புதிய பந்தில் டெஸ்ட் போட்டிகளிலும் பந்துவீச வாய்ப்புள்ள கைல் ஜேமிசன், தனது உயரத்தைப் பயன்படுத்தி கூடுதல் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ருதுராஜ் பாவம் இந்தப் பந்து வீச்சுக்கு இரையானார்.
இதற்கிடையே, அக்சர் படேலுக்கு வீசிய ஷார்ட் பந்தை பாயிண்ட் திசையில் அடித்தபோது, கெல்லி அந்த எளிய கேட்ச்சைத் தவறவிட்டார். அந்த கேட்ச்சைப் பிடித்திருந்தால் ஜேமிசனுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
டெஸ்ட் போட்டிகளுக்கான தங்களது தயார்நிலையை நிரூபிக்கும் வகையில் இரு வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் தலா ஆறு ஓவர்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், மாட் ஃபிஷர் தனது அதிவேகப் பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்தார். வேகத்தைக் குறைக்காமல் பந்துவீசிய அவர், சரியான லெந்த்தில் பந்துகளை வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனால், மீண்டும் பந்துவீச வந்த ஹென்றிக்கும் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வாய்ப்பு கிடைத்தது. இடது கை பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை மூன்று முறை தகர்த்த அவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
