விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெருங்கனவு இருக்கும். அது தன் தேசத்துக்காக உயர் செயல்திறனை வெளிப்படுத்தி பதக்கம், பட்டம் வெல்வது. அது ஒலிம்பிக், உலகக் கோப்பை என நீளும். இப்போது அப்படியொரு சாதனையை படைத்துள்ளார் இந்திய குத்ததுச்சண்டை விளையட்டு வீரர் அம்பேகர் மீட்டேய்.
செனகல் நாட்டின் தாக்கர் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் அம்பேகர் மீட்டேய். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் ஆகியுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2010-ல் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஷிவா தாபா வெள்ளி வென்றது தான் குத்துச்சண்டையில் வென்ற உயரிய பதக்கமாக இருந்தது.
இளையோர் ஒலிம்பிக் 2026-ல் ஆடவர் 50 கிலோ பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிச் சுற்றில் அயர்லாந்தின் கிறிஸ்ட்டியன் ஜுபானியை எதிர்த்து விளையாடினார் லாய்ரென்லாக்பம் அம்பேகர் மீட்டேய். இதில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இதே குத்துச்சண்டையில் மகளிர் பிரிவில் இந்தியாவின் குஞ்சனும் தங்கம் வென்றார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
யார் இந்த அம்பேகர் மீட்டேய்?
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயதான அம்பேகர் மீட்டேய். அவரது தந்தை மந்தன் மீட்டேய். தங்களது சொந்த ஊரில் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
முதலில் தனது மகனை கால்பந்து பயிற்சிக்கு தான் அழைத்து சென்றுள்ளார் மந்தன் மீட்டேய். ஆனால், மகனின் ஆக்ரோஷ திறனை கண்ட அவர், அதன் பின்னர் கடந்த 2018-ல் குத்துச்சண்டை பயிற்சியில் சேர்த்துள்ளார். அப்போது அவருக்கு சுமார் 10 வயது.
தங்கள் கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த பயிற்சி மையத்தில் தினமும் பயிற்சி செய்துள்ளார் அம்பேகர் மீட்டேய். இதற்காக சைக்கிளை இரவல் வாங்கியும், சமயங்களில் நடந்தும் சென்று வந்துள்ளார். தொடக்கத்தில் குத்துச்சண்டை விளையாட்டுக்கு தேவையான கிளவ் வாங்க முடியாத நிலையில் இருந்துள்ளார். ஆயினும், மனம் தளராது பயன்படுத்திய கிளவ்களை பெற்று பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
பயிற்சி முடித்த பிறகு அப்பாவின் தேநீர் கடையில் அவருக்கு உதவியும் செய்துள்ளார். இது அப்படியே சில ஆண்டுகள் நடந்துள்ளது. மணிப்பூரில் சப்-ஜூனியர் அளவில் தனது ஆட்டத்தின் மூலம் அம்பேகர் மீட்டேய் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் இம்பாலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி செய்துள்ளார். இதற்கு அவரது பயிற்சியாளர் உதவினார்.
அங்கிருந்து இந்திய சர்வதேச இளையோர் குத்துச்சண்டை டிரையலில் பங்கேற்றார். 4-வது இடம் பிடித்தாலும் அவருக்கு தேசிய அளவிலான முகாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன் மூலம் பாட்டியாவிலுள்ள தேசிய விளையாட்டு இன்ஸ்டியூட்டில் (என்ஐஎஸ்) பயிற்சி பெற்றார். தாய்லாந்தில் பாகிஸ்தான் ஃப்யூச்சர்ஸ் உலகக் கோப்பையில் வெள்ளி, தேசிய இளையோர் போட்டியில் வெள்ளியும் வென்றார். இப்போது இளையோர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
‘குத்துச்சண்டையில் எனது ரோல் மாடல் என்றால் மணிப்பூர் மட்டுமலலாது உலகத்தின் சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் என்று சொல்வேன். மைக் டைசன் வீடியோவை பார்ப்பேன். 2030 காமன்வெல்த் விளையாட்டு மற்றும் 2032 ஒலிம்பிக் தான் என்னுடைய அடுத்த இலக்கு’ என்று அம்பேகர் மீட்டேய் தெரிவித்துள்ளார்.
