அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 155 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வென்றிருந்தது. இதன் வாயிலாக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணி 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய அணிக்கு எதிராக இருதரப்பு டி20 தொடரை அயர்லாந்து அணி வெல்வது இதுவே முதன்முறையாகும்.
போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரேயான் டென் டஸ்ஷேட் கூறியதாவது: இந்த தோல்வியை எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை. நாங்கள் உலகக் கோப்பை தொடரை இப்போதுதான் வென்றிருக்கிறோம். தங்களது அடிப்படை ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியிடம் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். வெற்றி பெற்ற அயர்லாந்து அணிக்கு பாராட்டுகள்.
இந்த தொடரில் இருந்து மாறுபட்ட ஆடுகளச் சூழல்களுக்கும், வெவ்வேறு அணிகளுக்கும் ஏற்ப எவ்வாறு தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம். இங்குள்ள ஆடுகளச் சூழல், பலத்த காற்று பெரிய விஷயமாக இருந்தது, ஆனால் இவற்றை தோல்விக்கான காரணங்களாக சொல்ல முடியாது. வெவ்வேறு சவால்களுக்கு வேறுபட்ட முறையில் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.
அயர்லாந்து அணி தங்களது அடிப்படை ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. அதை எங்களால் முறியடிக்க முடியவில்லை. நாங்கள் சிக்ஸர்களை மிகவும் எளிதாக அடிக்கக்கூடிய அதிவேக ஆட்ட முறைக்கு பழகிவிட்டோம். அதனால் இதுபோன்ற ஆடுகளச் சூழல்களில் சற்று சாதுரியமாக செயல்பட வேண்டும்.
அயர்லாந்து அணி வீரர்கள் பந்துவீச்சில் அற்புதமாகச் செயல்பட்டனர். அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்தனர். அதிலிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
