Home விளையாட்டு செய்திகள் முதல் டெஸ்டில் இன்று மோதல்: ஆஸி.யிடம் தாக்குப்பிடிக்குமா வங்கதேசம்?

முதல் டெஸ்டில் இன்று மோதல்: ஆஸி.யிடம் தாக்குப்பிடிக்குமா வங்கதேசம்?

0

ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதன் முதல் போட்டி மராரா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் ‘பிக் ஃபோர்’ என அழைக்கப்படும் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு ஒன்றாக இணைந்து விளையாட உள்ளனர். இவர்களுடன் ஸ்காட் போலந்தும் பந்துவீச்சில் வலுசேர்க்கக்கூடும்.

ஆல்ரவுண்டர்களாக அணியில் கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளனர். பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட்டுடன் ஜேக் வெதரால்ட் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் 3 மற்றும் 4-வது இடங்களில் பலம் சேர்க்கக்கூடும்.

வங்கதேச அணி பயிற்சி ஆட்டத்தில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான நஹித் ராணா, முஸ்டாபிஸுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது அணியின் பலவீனத்தை அதிகரித்துள்ளது. பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த முஸ்பிகுர் ரஹிம், கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் வங்கதேச அணிக்கு பேட்டிங்கிலும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

12 மாதங்களில் 20 டெஸ்ட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 12 மாதங்களில் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து வரும் அக்டோபரில் தென் ஆப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலிய அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.

இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டிகளின் 150 வருட கொண்டாட்டமாக நடத்தப்படுகிறது.

இந்த போட்டி மெல்பர்ன் மைதானத்தில் 2027-ம் ஆண்டு மார்ச்சில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version