Home விளையாட்டு செய்திகள் இந்திய அணிக்குத் தேர்வானது எனது அமைதிக்குக் கிடைத்த பரிசு: சொல்கிறார் சரண்ஷ் ஜெயின்

இந்திய அணிக்குத் தேர்வானது எனது அமைதிக்குக் கிடைத்த பரிசு: சொல்கிறார் சரண்ஷ் ஜெயின்

0

இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வானது எனது அமைதிக்குக் கிடைத்த பரிசு என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதுமுக வீரர் சரண்ஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி (நாளை) காலே நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் புதுமுக வீரர்களாக சரண்ஷ் ஜெயின், அகிப் நபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சரண்ஷ் ஜெயின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஆல்-ரவுண்டரான சரண்ஷ் ஜெயின் சுழற்பந்து வீச்சிலும் வல்லவர்.

இந்திய அணிக்குத் தேர்வானது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் சரண்ஷ் ஜெயின் கூறியதாவது:

இலங்கை தொடருக்கான இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது தொடர்பாக எனக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர். அப்போது நான் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தேன். 2014-15-ம் ஆண்டிலேயே ரஞ்சி டிராபி போட்டிக்கான மத்திய பிரதேச அணியில் இடம்பெற்று விட்டேன். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

ரஞ்சி போட்டிக்கும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் உணர வில்லை. இப்போதுள்ள கிரிக்கெட் அணியில் இடம்பெற்று இருக்கும் 70 முதல் 80 சதவீத வீரர்களுடன் நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ளேன்.

இந்த வாய்ப்பு எனது அமைதிக்குக் கிடைத்த பரிசு என்றே நினைத்துக் கொண்டேன். ஒரு நாள் நான் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

54 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சரண்ஷ் ஜெயின் 85 இன்னிங்ஸ்களில் பங்கேற்று 2,223 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்களும், 14 அரை சதங்களும் அடங்கும். மேலும் 188 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

அதேபோல் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ள அகிப் நபி கூறும்போது, “நான் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ திறன்மிகு பயிற்சி மையத்துக்கு செல்ல விமான நிலையத்தில் இருந்தேன். அப்போது இலங்கைத் தொடருக்காக தேர்வாகியுள்ளது குறித்து எனக்கு செய்தி வந்தது. என்னால் இதை நம்ப முடியவில்லை.

இந்தத் தொடரில் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன்” என்றார்.

அகிப் நபி, ஜம்மு-காஷ்மீர் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 60 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் அகிப் நபி.

இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்பிராஸ் கான், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், அகிப் நபி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version