ஆசிய விளையாட்டு போட்டியில் 4×100 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர், சினேகா சத்யநாராயணன், ஹரிதா பத்ரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 41.06 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா (40.78 விநாடிகள்) தங்கப் பதக்கமும், தாய்லாந்து (40.87) வெள்ளிப் பதக்கமும் வென்றன.
ஆடவருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்கு வெண்கலம்
ஆடவருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தரம்வீர் சவுத்ரி, மானு தெக்கினாலில், ஜெய் குமார், விஷால் தென்னரசு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:01.61 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஜப்பான் (3:00.75) தங்கப் பதக்கமும், கத்தார் (3:00.93) வெள்ளிப் பதக்கமும் வென்றன.
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விஷால் தென்னரசு தமிழகத்தின் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். நடப்பு ஆசிய விளையாட்டில் விஷால் தென்னரசுக்கு இது 2-வது பதக்கமாக அமைந்தது. அவர், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா – இலங்கை மோதல்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான கிரிக்கெட் கால் இறுதி சுற்றில் நேற்று இலங்கை – நேபாளம் அணிகள் நகோயா நகரில் மோத இருந்தன. ஆனால் இந்த ஆட்டம் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து ஐசிசி தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறியது. 14-வது இடத்தில் இருந்த நேபாளம் அணி வெளியேறியது.
மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டியில் 4 கால் இறுதி ஆட்டங்களும் ரத்தாகி உள்ளன. நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – இலங்கைஅணிகள் மோதுகின் றன. மற்றொரு அரை இறுதியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பொம்மதேவரா, நீரஜ் சவுகான் வெற்றி
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான வில்வித்தை தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, நீரஜ் சவுகான் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். நீரஜ் சவுகான் 6-4 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் ஜி டியோக்கையும், தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சீன தைபேவின் செங் சியாங்-ஹுய்-யையும் தோற்கடித்தனர்.
கால் இறுதி சுற்றில் தீரஜ் பொம்மதேவரா, உஸ்பெகிஸ்தானின் அமிர்கோன் சாடிகோவுடனும் நீரஜ் சவுகான், பூடானின் லாம் டோர்ஜியுடனும் மோதுகின்றனர். மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் குங்கும் முகத் அனில் 6-0 என்ற கணக்கில் வங்கதேசத்தின் சைமா சலாவுதினை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.
சுமித் நாகல், தட்சிணேஸ்வர் முன்னேற்றம்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ் 7-5 7-6(2) என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் குனவான் ட்ரிஸ்முவாந்தராவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான சுமித் நாகல் 6-4 6-0 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியோங்சான் ஹாங்கை தோற்கடித்தார்.
வாலிபால் கால் இறுதியில் இந்திய அணி
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான வாலிபால் போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று கத்தாருடன் மோதியது. இதில் முதல் இரு செட்களையும் இந்திய அணி 26-28, 25-27 என நெருக்கமாக வந்து இழந்தது. எனினும் அடுத்த 3 செட்களையும் கடுமையாக போராடி 25-23, 25-20, 24-22 என கைப்பற்றியது.
2 மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 26-28, 25-27, 25-23, 25-20, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வியட் நாமையும், 2-வது ஆட்டத்தில் ஹாங் காங்கையும் வீழ்த்தியிருந்தது.
கத்தார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் ஜெரோம் வினித் 27 புள்ளிகளையும், அமித் சிங் பல்வான் 24 புள்ளிகளையும், ஜோயல் பெஞ்சமின் ஜெபராஜ் 17 புள்ளிகளையும் குவித்தனர். இதில் ஜெரோம் வினித், ஜோயல் பெஞ்சமின் ஜெபராஜ் ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.
படகோட்டுதலில் முன்னேற்றம்
ஆசிய விளையாட்டு போட்டியில் படகோட்டுதலில் ஆடவருக்கான கயாக் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஹிதேஷ் கேவாத் பந்தய தூரத்தை 118.22 விநாடிகளில் எட்டி 8-வது இடமும், பிரத்யும்னா சிங் ரத்தோர் 127.70 விநாடிகளில் எட்டி 10-வது இடமும் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் பல்லவி ஜெகதாப், ரினா சென் ஆகியோரும் அரை இறுதிக்குள் நுழைந்தனர்.
