கிரிக்கெட்டை உலகளாவிய விளையாட்டாக மாற்ற பல நாடுகள் முன்வரவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரைப் போலவே ஐரோப்பாவில் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (இடிபிஎல்) கிரிக்கெட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் டப்ளின் கார்டியன்ஸ், எடின்பர்க் கேஸ்டில் ராக்கர்ஸ்,
ராட்டர்டாம் டாக்கர்ஸ், கிளாஸ்கோ காஸ்மிக், ஐரிஷ் உல்ஃப்ஸ், ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் டப்ளின் கார்டியன்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: உலக அளவில் இன்று பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் கூட கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. தற்போது ஐரோப்பாவிலும் இடிபிஎல் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கவுள்ளோம். இந்த இடிபிஎல் போட்டியின் காரணமாக ஐரோப்பா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு பரவுவதற்கு வசதி ஏற்படும்.
அண்மையில் டி20 தொடரில் அயர்லாந்து அணியிடம் இந்திய கிரிக்கெட் அணி 0-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இந்தத் தொடரின் மூலமாக எனக்கு 2 விஷயங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. முதலாவதாக, தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த ஓர் அணி, முதல் இடத்தில் இருந்த அணியை வீழ்த்தியது.
விளையாட்டு என்பது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியும் நமக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்துள்ளது.
கிரிக்கெட் ஒரு உண்மையான உலகளாவிய விளையாட்டாக மாறுவதற்கும், இன்னும் பல நாடுகள் கிரிக்கெட்டை விளையாடுவதற்கும், அடுத்த சில ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவுள்ளதற்கும் இது ஒரு மிகப்பெரிய சாதகமான விஷயமாக நான் பார்க்கிறேன். கிரிக்கெட்டை உலகளாவிய விளையாட்டாக மாற்ற பல நாடுகள் முன்வரவேண்டும்.
இரண்டாவது அம்சம் என்னவென்றால், ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான சூழல் இருந்து, மட்டைக்கும் பந்துக்கும் இடையே சமநிலை இருந்தால், பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தில் முக்கியப் பங்காற்றுவார்கள். இதை இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அயர்லாந்து அணி சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இடிபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
