பான் – இந்தியா படங்கள் மிகப்பெரிய மோசடி: அனுராக் காஷ்யப் விமர்சனம்

0
112

இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. அவர், ‘தி இந்து’ நாளிதழ் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, பான் இந்தியா திரைப்படங்கள் மிகப்பெரிய மோசடி என்று விமர்சித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “பான்-இந்தியா’ என்ற சொல் ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களைக் குறிக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த போக்கு அதிகரித்துவிட்டது. அடுத்து, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ போன்ற படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றி, பான் இந்தியா விநியோகத்தை மேலும் அதிகரித்தன. இது இன்னும் அதிகரிக்கும். ஒரு, பான் இந்தியா திரைப்படம் 3 முதல் 4 வருடங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல பேர் அந்தப் படத்தை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் படத்தைச் சார்ந்தே இருக்கின்றன.

ஆனால், தயாரிப்பாளரின் முழு பணமும் படத்துக்குச் செல்வதில்லை. அர்த்தமற்ற பிரம்மாண்டமான, உண்மையற்ற ‘செட்’களுக்காகச் செலவிடப்படுகிறது. இந்தியில் ‘உரி: த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ வெற்றி பெற்றதும் அதுபோன்ற படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர். ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு, பிரபாஸை வைத்து பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர். ‘கேஜிஎஃப்’ வெற்றி பெற்றதும் அதைப் பின்பற்ற விரும்பினர். கதைசொல்லலின் வீழ்ச்சி அங்குதான் தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here