உதயமானார் பாகிஸ்தானின் புதிய ஆல்ரவுண்டர்: யார் இந்த ரஸாவுல்லா?

0
31

ஒன்றுமில்லாமல் உதிர்ந்து போய்க் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா ஆச்சிபி எழுதிய ‘Things fall apart’ நாவல் தலைப்பை நினைவூட்டும் பாகிஸ்தான் அணிக்கு உத்வேகமூட்டும் புத்துணர்வூட்டும் புதிய ஆல்ரவுண்டராக 21 வயதேயான ரஸாவுல்லா உதயமாகி உள்ளார்.

நேற்று பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இறங்கினார் ரஸாவுல்லா. 63 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிச்ஸர்கள் என்று இங்கிலாந்து பவுலிங்கைப் புரட்டி எடுத்து 81 ரன்களை விளாசி தள்ளினார்.

இவருடன் ஆடிய இன்னொரு பவுலர் முகமது அப்பாஸ் 42 ரன்களை எடுக்க 8 விக்கெட் இழப்புக்கு 318 ரங்களில் இருந்து 21 ஓவர்களில் மேலும் 121 ரன்களைச் சேர்த்து பாகிஸ்தான் ஸ்கோரை 96 ஓவர்களில் 449 ரன்கள் என்று உயர்த்தக் காரணமானார். இதனையடுத்து இங்கிலாந்துக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுக பேட்டர் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச சிக்ஸர்கள் சாதனையைச் சமன் செய்துள்ளார் ரஸாவுல்லா.

312 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் தோல்வியின் அபாயத்தில் இருந்தது. ஆனாலும் ரஸாவுல்லாவுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. களத்தில் இருந்த அடுத்த 117 நிமிடங்களில், இங்கிலாந்து பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்தார். தனது மூர்க்கத்தனமான பலத்தால் இங்கிலாந்தின் வேகப்பந்து தாக்குதலை முடக்கினார். கஸ் அட்கின்சனை தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களால் சிதைத்தார். ஏன் அதிவேக பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சரால் கூட பந்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. 88-வது ஓவரில் இவரையும் மூன்று சிக்ஸர்கள் விளாசினார். ​​பாகிஸ்தான் 400 ரன்களைக் கடந்தது. ஜாஷ் டங்கை அடித்த மிகப்பெரிய சிக்ஸர் இங்கிலாந்து மீண்டும் பேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது.

மொத்தம் ஒன்பது சிக்ஸர்களை விளாசியதன் மூலம், அறிமுகப் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்ததற்கான டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை ரஸாவுல்லா சமன் செய்தார்; இதன் மூலம் அவர் நியூசிலாந்தின் டிம் சவுதியுடன் இணைந்தார்.

யார் இவர்?

மலைப்பாங்கான கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் உள்ள மர்தான் ரஸாவுல்லாவின் சொந்த ஊர். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது; ஆனால், மறுநாள் காலைத் தொழுகைக்காக எழுந்தபோதுதான் அவர் அந்த அழைப்பைக் கவனித்தார். உடனடியாக லாகூருக்கு வருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது; ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அவர் நினைத்துக்கொண்டார்.

ஆனால், அவரது பாஸ்போர்ட் இங்கிலாந்து சுங்கத்துறைக்கு அனுப்பப்பட்டிருந்தது; அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சுக்குத் தேர்வான இன்ப அதிர்ச்சி பிறகுதான் அவருக்குத் தெரிந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் அட்டகாசமான ஆக்‌ஷனில் மணிக்கு 140 கி.மீ வேகத்திற்கு மேல் வீசி ஜோ ரூட் உட்பட 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார் ரஸாவுல்லா.

8 முதல் தரப் போட்டிகளில் ஆடி 30 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். 9 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 30 விக்கெட்டுகளையும் 7 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ராவல்பிண்டிஸ், பெஷாவர் அணிகளுக்காக அவர் பாகிஸ்தானில் ஆடுகிறார். 2025 நவம்பரில்தான் இவர் முதல் தரக் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பேட்டிங்கில் 8 முதல் தரப்போட்டிகளில் 333 ரன்களை 74.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். இந்த ஒரே சதமும் கோச் அவரை ஓப்பனிங்கில் இறக்கியதால் வந்தது. எனவே ஓப்பனிங் ஆடும் திறமையும் ரஸாவுல்லாவிடம் உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்து வந்த நிலையில் அந்த அணிக்கு புதிய தீபத்தை ஏற்றி ஒளி கொடுத்துள்ளார் ரஸாவுல்லா என்றால் மிகையானதல்ல.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here