நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் மற்றும் சாட்சியம் அளிக்க வந்த கர்நாடகா சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் தலைவர் அன்வர் ஆகியோரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மிரட்டினர் என பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா புகார் அளித்துள்ளார்.
வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி, நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவுக்கு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக கடந்த 14-ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அன்வர் மனிப்பாடி வந்து கர்நாடகாவில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். வக்பு வாரிய நிலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடி. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்குதொடர்பு உள்ளது என்றார்.இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் ஜெகதாம்பிகா பால் மற்றும் அன்வர் அருகே சென்று மிரட்டி கூட்டுக்குழு ஆவணங்களை கிழித்தெறிந்தனர். அவர்களை தாக்குவது போல மிரட்டினர். அதன்பின் அவர்கள் உறுப்பினர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினர். நாடாளுமன்ற நடத்தை விதிமுறைகளை பின்பற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாஜக எம்.பி தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற நடத்தை விதிமுறைகள் மீறப்படுகின்றன. கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால்பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார்’’ என கூறியுள்ளனர்.