போக்குவரத்து ஊழியர்களுக்கு மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உறுதி

0
428

பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.

இதுதொடர்பாக நடந்த பலகட்ட சமரசப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. இதற்கிடையே, சென்னை தேனாம்பேட்டையில், தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

இதில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொழிற்சங்கத்தினர் தரப்பில் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், ஆர்.கமலக்கண்ணன், தாடி ம.ராசு, ஆறுமுகம், கே.வெங்கடேசன், எம்.கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை 2 மணி நேரம் நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறும்போது, பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

மற்ற கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தனர். இதில் எங்களுக்கு திருப்தியில்லை. எத்தனை காலத்துக்குதான் அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருப்பார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியானால் நடத்தை விதிகளை காரணம் காட்டி எதையுமே வழங்க முடியாத நிலை ஏற்படும். புதிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. இடைக்கால நிவாரணத்தையாவது ஒரு வாரத்துக்குள்ளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.497 கட்ட வேண்டிய இடத்தில் ரூ.1,112 செலுத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியர்களை வஞ்சிக்கக் கூடிய செயல் என்றார்.

அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறும்போது, முதன்மை கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் இடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரமும், ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வும் வழங்க வேண்டும் என கோரியுள்ளோம். 11-ம் தேதிக்குள் முடிவு சொல்லவில்லையெனில், எங்களது கூட்டமைப்பு சார்பில் அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குவோம். ஓய்வுபெற்றவர்களுக்கான பணப்பலன் வழங்குவதற்காக நிதி திரட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here