‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிச் செய்து வருகின்றன. இதில் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் ஒன்று.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் 5 பாடல்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பொங்கல் விடுமுறைக்கு வெளியிட்டு விடலாமா என்ற ஆலோசனை நடந்தது. இது சாத்தியமா, பணிகள் முடிவடைந்துவிடுமா என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அதன் முடிவில், பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என இறுதி செய்யப்பட்டது.
‘விடாமுயற்சி’ படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. அப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை வெளியிடலாம் என்று ரெட் ஜெயன்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.