அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். கால் இறுதி சுற்றில் வைஷாலி 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் சூ ஜினரை தோற்கடித்தார். இதையடுத்து நடைபெற்ற அரை இறுதி சுற்றில் மற்றொரு சீன வீராங்கனையான ஜு வென்ஜுனுடன் மோதினார் வைஷாலி.
இதில் வைஷாலி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த வைஷாலிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. ஜு வென்ஜுன் இறுதிப் போட்டியில் சகநாட்டைச் சேர்ந்த லீ டிங்ஜியை 3.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். லீ டிங்ஜிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
ஓபன் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி மோதினார்கள். இந்த ஆட்டம் 3 முறை சடன்டெத்துக்கு சென்ற பின்னரும் முடிவு எட்டப்படவில்லை.
அப்போது கார்ல்சன், சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா? என போட்டி அமைப்பாளர்களிடம் கேட்டார். ஃபிடேவும் சம்மதம் தெரிவிக்க பிளிட்ஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன், இயன் நெபோம்னியாச்சி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். பிளிட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பகிர்ந்து கொள்ளப்படுவது இதுவே முதன்முறையாகும்.