ஆஸ்திரேலியா அருகே தனி நாடான கைலாசாவில் இருக்கிறார் நித்யானந்தா: உயர் நீதிமன்றத்தில் பெண் சீடர் தகவல்

0
91

ஆஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார்.

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை விலக்கக் கோரி நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், “மதுரை ஆதீன மடத்துக்குள் ஒரு பக்தராக நுழைய தடை விதிக்கக்கூடாது. நான் மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனுதாரர் நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்குள்ளது? அங்கு எப்படிச் செல்வது, கைலாசா செல்ல பாஸ்போர்ட், விசா உண்டா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நித்யானந்தாவின் சீடர் அர்ச்சனா பதிலளித்தார்.

அவர், “நித்யானந்தா ஆஸ்திரேலியா அருகேயுள்ள யுஎஸ்கே (யுனைடெட் ஸ்டேட் ஆஃப் கைலாசா) என்ற தனி நாட்டில் உள்ளார். இந்த நாடு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு. இந்த வழக்கில் புதிய வழக்கறிஞரை நியமிக்க உள்ளோம். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்றார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞரை மாற்ற அனுமதி வழங்கி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here