நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம், நம்பாளி, நடைக்காவு உட்பட சில பகுதிகளில் சாலையோரங்களில் இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியே வீசும் இறைச்சி கழிவுகளை உண்பதற்கு கடைகளின் முன்பு உள்ள சாலையில் ஏராளமான நாய்கள் கூட்டமாக நிற்பது உண்டு.
இறைச்சி கடை இரவு பூட்டிவிட்டு சென்ற பிறகு அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை இவை கும்பலாக விரட்டி சென்று பயமுறுத்துகின்றன. நாய் துரத்துவதால் பைக்கில் செல்பவர்கள் பதட்டம் அடைந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) இரவு 8 மணி அளவில் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் 10-க்கும் அதிகமான நாய்கள் திடீரென வலம் வந்ததால் அந்த பகுதி வழியாக பைக்கில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதை அடுத்து சில சமூக ஆர்வலர்கள் சந்திப்பு பகுதியில் கூட்டமாக நின்ற நாய்களை துரத்தினர். இதை அடுத்து இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் நிம்மதி அடைந்தனர். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.