சினிமா என்பது கூட்டு முயற்சி. ஒவ்வொரு திரைப்படத்துக்கு பின்னும் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன்கள் மட்டுமல்லாமல், ஏராளமான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும் இருக்கிறது. லைட்மேனில் இருந்து அரங்க அசிஸ்டென்ட் வரை சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவர்கள் தான்.
பெரும் உழைப்பில் உருவாகும் சினிமாவில், அமைப்புசாரா தொழிலாளர்களாக இருப்பதால், சினிமா தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்டவை கிடைப்பதில்லை. இதற்காகப் பல வருடங்களாகத் திரைப்பட தொழிலாளர் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை.
இதனால் 60 வயது வரை சினிமாவில் உழைத்துத் தேய்ந்த தொழிலாளர்கள், ஓய்வுக்குப் பின் கடும் பொருளாதாரச் சிக்கலை எதிர் கொள்வது வாடிக்கையாகி இருக்கிறது. இந்நிலையில், அதைப் போக்கும் விதமாக புதிய முயற்சி ஒன்றைத் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) எடுத்துள்ளது.
இதுபற்றி ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது கூறியதாவது:
திரைப்படத்துறை 100 ஆண்டுகளை கடந்தாலும் கூட சினிமா தொழிலாளர்களுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் இல்லை. ஒரு சினிமா தொழிலாளி பல தயாரிப்பாளர்களிடம் பணியாற்றி இருந்தாலும் 60 வயதுக்கு மேல் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றால் அவருக்கு அரசு உட்பட யாரும் உதவி செய்வதில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களாக இருப்பதால், தொடர்ந்து வேலை செய்தாலும் பி.எஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதில்லை.
இதைத் தயாரிப்பாளர்களிடம் கேட்டால், “அவர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியவில்லை, இந்தப் படம் முடிந்ததும் அடுத்த படம் என்று சென்றுவிடுவார்கள் என்பதால் நாங்கள் கொடுக்க முடியாது” என்பார்கள். அதனால் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் அவர்களுக்கு உதவ முடியாத சூழல் இருக்கிறது.
எனவே ‘பெப்சி’யில் இருந்து பெஸ்ரா (FESRA) என்ற இன்னொரு அமைப்பை, நிறுவனமாக உருவாக்கி அதிலிருந்து தொழிலாளர்களுக்கு பி.எஃப்., இஎஸ்ஐ உள்ளிட்டவற்றை பெற்றுத் தர முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் பெப்சியில் இருக்கும் 23 யூனியன்களும் அந்தந்த சங்கத்து உறுப்பினர்களாக இருப்பார்கள். இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான ‘பெஸ்ரா’ கார்டு வழங்கப்படும். ஒரு படம் தயாரிக்கப்படுகிறது என்றால் அந்த தயாரிப்பாளர்களுக்கு ‘ஸ்வைப்பிங் மெஷின்’ போன்ற ஒன்றை, எங்கள் அமைப்பு வழங்கும். அதில் எங்களால் கொடுக்கப்படும் கார்டை தொழிலாளர்கள் ‘ஸ்வைப்’ செய்தால், அவர்கள் பற்றிய விவரம், படப்பிடிப்பில் கலந்துகொண்ட நாட்கள் உள்ளிட்டவை பெப்சி அமைப்பு, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு நிர்வாகிக்குத் தெரியவரும்.
பெப்சியில் உள்ள 23 சங்கங்களில் 14 சங்கங்களின் உறுப்பினர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் மற்றவர்கள் தினசரி ஊதியத்திலும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான முறையில் தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளத்தை வாங்கி நாங்களே கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம். ஏப்.1 -ம் தேதி முதல் இதைச் சோதனை முயற்சியாகக் கொண்டு வருகிறோம். மே 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.