சாந்தனு – சீமான் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘ஒரு கைதியின் டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மதுரை பின்னணியில் அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட இப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார்.
சாம் சி எஸ் இசையமைக்கிறார். இப்படத்தை கேஆர்ஜி நிறுவனம் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிறுவனம் தயாரிக்கும் 10 -வது படம் இது.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். “குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக் ஷன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமைய உள்ளது. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரேவதி, ராதா நடித்து 1985-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் ‘ஒரு கைதியின் டைரி’. பாக்யராஜ் இதன் கதையை எழுதியிருந்தார். இந்த படத்தை அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்து இயக்கினார் கே.பாக்யராஜ். அந்தப் படங்களுக்கும் இந்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்துக்கும் தொடர்பில்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.















