“ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதைத்தான் நெதன்யாகு செய்வார்” – ட்ரம்ப் பெருமிதம்

0
27

 “ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு, “அவர் நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது” என்று பதிலளித்தார். 

மேலும் நெதன்யாகு இஸ்ரேலில் சரியாக நடத்தப்படவில்லை என்றும், தமக்கான ஆதரவு இஸ்ரேலில் 99 சதவீதமாக உள்ளதால், அதிபர் பதவிக்குப் பிறகு தாம் இஸ்ரேல் பிரதமராகப் போட்டியிடலாம் என்றும் ட்ரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

ஈரான் உடனான இந்த மோதல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று மீண்டும் உறுதியளித்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் தாமதமாவது குறித்த கேள்விக்கு“அமெரிக்கா வியட்நாமில் 19 ஆண்டுகளும், ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. ஆனால் நான் இந்த விவகாரத்தில் இறங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது.

அதிலும் பெரும்பாலான நாட்கள் போர்நிறுத்தத்தில்தான் கழிந்துள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரே ஒரு இறுதி வாய்ப்பை வழங்குகிறோம், இதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பல உயிரிழப்புகள் ஏற்படுவதை விட, குறைந்த அளவிலான இழப்புகளுடன் இதை முடிப்பதே என் இலக்கு” என்று அவர் கூறினார். 

அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த முறை போர் மத்திய கிழக்கைத் தாண்டி உலகளவில் விரிவடையும் என ஈரானின் புரட்சிகரக் காவல் படை எச்சரித்துள்ளது. ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், எதிரியின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் அமெரிக்கா புதிய தாக்குதலுக்குத் திட்டமிடுவதைக் காட்டுவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி புதன்கிழமை டெஹ்ரான் சென்று அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வருகிறார். 

இருப்பினும், பொருளாதாரத் தடைகளை நீக்குவது, போர் இழப்பீடு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட ட்ரம்ப் ஏற்கனவே நிராகரித்த கடுமையான நிபந்தனைகளையே ஈரான் மீண்டும் தனது புதிய முன்மொழிவிலும் சமர்ப்பித்துள்ளதால், மீண்டும் அமைதி திரும்புமா என்பதில் தொடர்ந்து சந்தேகம் நீடிக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here