அனலாக் பனீர் விற்பனைக்கு விரைவில் நாடு தழுவிய தடை: உணவு பாதுகாப்பு ஆணையம் முடிவு

0
23

பால் அல்லாத மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் செயற்கை பனீர் (Analogue Paneer) தயாரிப்பு, விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதலுக்கு நாடு தழுவிய அளவில் தடை விதிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்மொழிந்துள்ளது.

நுகர்வோரை ஏமாற்றும் வகையிலும், தயாரிப்பின் உண்மையான தன்மையை மறைக்கும் வகையிலும் பனீர் என்ற பெயரைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், 2011 உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனைத் தடை மற்றும் கட்டுப்பாடுகள்) விதிகளில் திருத்தம் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் கீழ், பாலில் இருந்து தயாரிக்கப்படாத அல்லது தாவர எண்ணெய், ஸ்டார்ச், தாவர புரதங்கள் மற்றும் பிற ரசாயனக் கலவைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக்’ தயாரிப்புகளுக்கு ‘பனீர்’ என்ற பெயரைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே உரிமம் பெற்ற அல்லது பதிவு செய்துள்ள நிறுவனங்கள், தங்களது பொருட்களின் பெயர், லேபிள் மற்றும் சந்தைப்படுத்துதலில் இருந்து பனீர் என்ற சொல்லை உடனடியாக நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வரைவுத் திருத்தத்திற்குப் பொதுமக்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் தங்களது கருத்துக்கள், ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை 60 நாட்களுக்குள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாகத் தெரிவிக்கலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னரே இறுதி விதிமுறைகள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும்.

ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அனலாக் பனீர் தயாரிப்புக்குத் தடை விதித்துள்ளன. மேலும், பிரபல உணவு விநியோக தளமான ஜொமேட்டோ தனது தளத்தில் செயற்கைப் பால் பொருட்களைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகளைத் தடை செய்துள்ளதோடு, விதிமுறைகளை மீறும் உணவகங்களை நீக்கும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here