இந்தியாவின் வெற்றிக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டது. இப்போது சாத் பண்டிகை தொடங்க உள்ளது. பண்டிகைக் காலம் என்பது அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் வீட்டிலேயே நேரத்தைச் செலவிட விரும்பும் ஒரு தருணம். ஆனால், உங்கள் பணிச்சூழல் பிரேக்கிங் நியூஸ் தேடி ஓடிக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.
இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் பிரேக்கிங் நியூஸ் அல்லாத இந்த நிகழ்வுக்கு நீங்கள் அனைவரும் வருகை தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
நீண்ட காலமாக ஊடகத் துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் எனக்கு நீண்டகாலமாகவே ஓர் இயல்பான நல்லுறவு இருந்து வருகிறது. செய்தி அறிக்கைகள் காலம் முதல் இன்ஸ்டாகிராம் ரீல்கள் வரை ஊடகத் துறையிலும், ஊடகத் தகவல் பரிமாற்றத்திலும் ஏற்பட்டுள்ள நீண்ட பரிணாம வளர்ச்சியை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
செய்தி உலகில் மிக முக்கியமான ஒன்று உண்டு; அது காலக்கெடு (deadline). உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே இந்த காலக்கெடுவைச் சுற்றியேதான் அமைகிறது. செய்தித்தாள் அச்சுக்குச் செல்லும் நேரமாக இருந்தாலும் சரி, ஒரு செய்தி ஒளிபரப்பப்படும் நேரமாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றுக்கும் ஒரு காலக்கொடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
இன்று நம் நாடும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்த காலக்கெடுதான் 2047-ம் ஆண்டு. இந்த நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு, சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே நம்மிடம் இருந்து வருகிறது. ஆனால், இப்போது இந்தக் கனவை நனவாக்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுதான் 2047.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இன்று இந்தியா அடைந்து வரும் சாதனைகளைக் கருத்தில் கொண்டால் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவது என்பது சாத்தியற்ற ஒன்றல்ல.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். நிலவின் தென் துருவத்துக்கு அருகில் விண்கலத்தை இறக்கி, இந்தியா வரலாறு படைக்கும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் தயாரிப்பு நாடாக மாறும் என்று யார் நினைத்திருக்க முடியும்? செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் கட்டப்படும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்?
வெறும் 12 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் உற்பத்தித் திறன் 50 மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. அதே 12 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் சூழலமைப்பை இந்தியா உருவாக்கி உள்ளது.
இந்தியா வளர்ந்த நாடாக மாற 2047 வரை காத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக, நாட்டின் சாதனைகளையும் நாட்டு மக்களின் சாதனைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வர நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
இந்தியாவின் வெற்றிக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக அமையும்.
மற்றொரு விஷயத்திலும் உங்கள் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன். போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக நாம் இதேபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது இளைஞர்களை இத்தகைய தீய பழக்கங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். சமூக அக்கறை கொண்ட விஷயங்களுக்கும் சமூகத்தை வலுப்படுத்தும் விஷயங்களுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கும்போது வளர்ந்த இந்தியாவை நோக்கிய முன்னெடுப்பு மேலும் வலுப்பெறும்.” என தெரிவித்துள்ளார்.














