இயற்கை பேரிடர்கள் வரும்போது மக்களை எப்படி மீட்பது மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் குறித்து நாகர்கோவில் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பேரிடர் காலமீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு தீயணைப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி துரை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆஸ்பத்திரி டீன் ராமலட்சுமி கலந்து கொண்டு பேரிடர் மீட்பு ஒத்திகையை தொடங்கி வைத்தார்.
இதில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தீயணைப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விளக்கினர். அப்போது பழைய துணி மற்றும் மரக்கட்டைகளில் தீயை பற்றவைத்து, அதனை எப்படி பாதுகாப்பாக அணைப்பது, மரங்கள் முறிந்து விழுந்தால் எப்படி பாதுகாப்பாக வெட்டி அகற்றுவது குறித்தும் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியை பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்தனர்.