மோடி 3.0-ன் முதல் அமைச்சரவை கூட்டம்: யாருக்கு எந்த இலாகா ஒதுக்குவது என ஆலோசனை

0
125

மோடி 3.0 அமைச்சரவையின் முதல் கேபினெட் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) மாலை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட்டில் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் வீடுகள் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் PMAY-G திட்டத்தின் கீழ் இரண்டு கோடி கூடுதல் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். இதனை முதல் திட்டமாக செயல்படுத்தும் பொருட்டு முதல் கேபினெட் கூட்டத்திலேயே அதற்கு ஒப்புதல் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இன்று நடைபெறும் கேபினெட் கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை விரைவில் கூட்டி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தவும் வலியுறுத்தப்படும் என்றும் தெரிகிறது.

யாருக்கு எந்த இலாகா?: இதே கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு எந்த இலாகா ஒதுக்குவது, எந்த பணிகளை கொடுப்பது என்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தலாம் என்றும் சொல்லப்படுகின்றன.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். 72 அமைச்சர்களும் நேற்றே பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, தனது இல்லத்தில் நடந்த தேநீர் விருந்தின்போது, ​​தனது மூன்றாவது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களிடம், ‘100 நாள் வேலைத் திட்டத்துடன்’ செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.