கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் டெல்லி அமைச்சர் அதிஷி மற்றும் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனியும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு நேற்றைய (ஜூன் 9) தினம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அதிஷி. அதில் யமுனை ஆற்றில் இருந்து முனாக் கால்வாய் வழியாக 1,050 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என கோரியிருந்தார்.
முன்னதாக, தங்களுக்கான நீரை ஹரியாணா மாநில அரசு வழங்காதது தான் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை அவர் வைத்திருந்தார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஆளுநர் வி.கே.சாக்சேனாவை அதிஷி சந்திக்க உள்ளார். ஆளுநர் இல்லம் தரப்பில் இதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
“பொய் பேசுவது ஆம் ஆத்மியின் டிஎன்ஏ-விலேயே உள்ளது. அதை வைத்து தான் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்” என முதல்வர் நயாப் சிங் சைனி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். முன்னதாக, ஹரியாணா, இமாச்சல் மற்றும் உத்தர பிரதேச அரசு கூடுதல் நீர் திறக்க வேண்டுமென சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லிக்கு உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல் பிரதேச அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி குடிநீர் வாரிய தரவுகள் ஹரியாணா கூடுதல் நீரை திறந்துள்ளதாக தெரிவிக்கிறது என்றார்.