சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்காக மாநகராட்சி – பெருநிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக, பொது மக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக பாதுகாப்புடன் கூடிய அதிநவீன குளிரூட்டப்பட்ட (ஏசி) பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ் நகரின் 11 முக்கிய இடங்களில் இந்த நவீனப் பேருந்து நிறுத்தங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி அண்ணாசாலை டிஎம்எஸ், மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து முனையம், வடபழனி சிம்ஸ் மருத்துவமனைக்கு வரும் வழி மற்றும் செல்லும் வழி, கிண்டி சின்னமலை, ஆற்காடு சாலை ஆவிச்சி பள்ளி, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு, எழும்பூர் தெற்கு ஆகிய 11 இடங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் கையெழுத்தாகின.
இந்தப் புதிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைஃபை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளப்பாதை, பேருந்து வழித்தட வழிகாட்டித் திரைகள், உயர்தர மின்விளக்குகள், வெப்பத்தைத் தாங்கும் கூரை, பலமான பாதுகாப்புக் கண்ணாடி மற்றும் செல்போன் யுஎஸ்பி சார்ஜிங் பாயின்ட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில் சென்னை போக்குவரத்துக் கூடுதல் காவல் ஆணையர் பா.சாமூண்டீஸ்வரி, இணை ஆணையர் செ.சரவணன், தலைமைப் பொறியாளர் பி.சங்கரவேலு, கண்காணிப்புப் பொறியாளர் எம்.பழனி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.















