மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த தமிழக முதல்வர் விஜய், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து, விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேட்டூர் அணையில் நிகழ்ச்சியை முடித்த முதல்வர், ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு புறப்பட்டார். அப்போது மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே உள்ள சின்னக்காவூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராமசாமியின் வீட்டுக்குச் சென்றார். ராமசாமியின் குடும்பத்தினர் முதல்வரை உற்சாகமாக வரவேற்று தோட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது மூதாட்டி செல்லம்மாள், முதல்வரின் கையைப் பிடித்து கன்னத்தை வருடி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அங்கிருந்த விவசாயிகள் மற்றும்
குடும்பத்தினருக்கு முதல்வர் வேட்டி, சேலை வழங்கினார். மேலும், தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை மூதாட்டி செல்லம்மாளுக்கு அணிவித்தார். முதல்வர் அங்கிருந்து புறப்பட்டபோது, மூதாட்டியின் குடும்பத்தினர் அனைவரும் ரோடு வரை வந்து வழியனுப்பினர்.
இதுகுறித்து மூதாட்டி செல்லம்மாள் கூறுகையில், “முதல்வர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவரை பார்த்ததும் பேச்சு வரவில்லை. எங்கள் தோட்டத்தை பார்வையிட்டு பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார். மேட்டூரில் இருந்து சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர்
பகுதிக்கு முதல்வர் வேனில் சென்றபோது, சாலையோரத்தில் நின்றிருந்த மூதாட்டிகளைப் பார்த்து வாகனத்தை நிறுத்தினார். கீழே இறங்கிய அவர், அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் வேனில் மேட்டூருக்குச் சென்றார். விமான நிலையம் முதல் மேட்டூர் வரையிலும், மீண்டும் மேட்டூரில் இருந்து விமான நிலையம் வரையிலும் அவர் ரோடு ஷோ சென்றார்.
சுமார் 40 கி.மீ. தொலைவுக்கு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் மலர்தூவி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிலர் வேல், புகைப்படம் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினர்.
பொதுமக்கள் வழங்கிய புகைப்படங்களில் முதல்வர் கையெழுத்திட்டு திருப்பி வழங்கினார். வரவேற்று பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட எல்லை யான திமிரிகோட்டை பகுதியில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வரை வரவேற்ற சம்பவம் விமர்சனத்துக்குள்ளானது.
முன்னதாக சேலம் விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல்வரை வரவேற்றனர். மேட்டூர் அணையியில் காவல்துறை அணிவகுப்பு நடத்தப்பட்டது.















