திரிபுராவுக்கு எதிராக அகர்தலாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியிலிருந்து பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். உடற்தகுதி மற்றும் நடத்தை ஒழுங்கீனம் தொடர்பாக அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடிய பிரித்வி ஷா பிரச்சினைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். 24 வயதாகும் பிரித்வி ஷாவின் உடல் எடை வயதுக்கு மீறியதாக இருப்பதாகவும், அணியின் பயிற்சி அமர்வுகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பிரித்வி ஷா தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கூறும்போது, “அவர் களத்தில் ஓடும் போது அவரது உடல் தகுதியை நீங்கள் பார்க்க வேண்டும். மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கென்று நீண்ட வரலாறு உள்ளது. ஒரு குறிப்பிட்ட வீரர் இதிலிருந்து விதிவிலக்கு பெற முடியாது.” என்றார்.
பெங்களூருவில் நடைபெற்ற கண்டிஷனிங் முகாமைத் தவிர்த்தார் பிரித்வி ஷா. ஆனால் அப்போது நார்த்தாம்ப்டன் ஷயருக்கு ஆடினார். சென்னையில் புச்சிபாபு தொடரிலும் ஆடினார். உள்நாட்டு கிரிக்கெட் தொடரை 76 ரன்கள் என்று நல்ல முறையில்தான் தொடங்கினார். ரஞ்சி சீசனில் இரண்டு சுற்றுகளில் முறையே 7, 12, 1 மற்றும் 39 நாட் அவுட் என்று ஃபார்மும் சிக்கலாகி விட்டது.
ஃபார்மிலும் இல்லை, உடல் எடையும் அதிகம் இதனால் களத்தில் மெதுவாக ஓடுவது போன்ற கோளாறுகள், பீல்டிங்கில் சொதப்பல் என்று ஏகப்பட்ட சிக்கல் அவரிடம் இருப்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரித்வி ஷாவுக்குப் பதிலாக 29 வயது இடது கை பேட்டர் அகில் ஹெர்வாட்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை 7 சதங்கள், 10 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
மும்பை அணி: ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, அகில் ஹெர்வாட்கர், ஸ்ரேயஸ் அய்யர், சித்தேஷ் லாத், சூர்யான்ஷ் ஷெட்கே, ஹர்திக் தாமோர் (வி.கீ.) சித்தார்த் அதாத்ரோ (வி.கீ., ஷாம்ஸ் முலானி, கர்ஷ் கோத்தாரி, ஹிமான்ஷு சிங், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, ஜுனேத் கான், ராய்ஸ்டன் டயஸ்.