அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு: நேரில் ஆஜரான விசாரணை அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

0
190

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாகசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பூமிநாதன் நேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக ஆஜராகியிருந்தார்.

அப்போது நீதிபதி, புலன் விசாரணை அதிகாரியான பூமிநாதனிடம் எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்புச்சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள் என்றார். அதற்கு அவர் 7 ஆண்டுகளாக விசாரித்துவருகிறேன் என்றார். இந்த 7ஆண்டுகளில் எத்தனை வழக்குகளில், எதிர்மனுதாரர்கள் தங்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை செய்து இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் இருவரும் தங்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என பதில்மனு தாக்கல்செய்துள்ளீர்களே. அப்போதுஇந்த வழக்கில் மேல்விசாரணை செய்ய வேண்டும் என உங்களுக்கு தோன்ற வில்லையா என்றும், 2021-ம்ஆண்டுக்குப்பிறகு திடீரென இந்த வழக்கில் மேல்விசாரணை செய்ய வேண்டும்என தோன்றியது ஏன் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு புலன் விசாரணை அதிகாரியான பூமிநாதன், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் மேல் விசாரணை செய்யப்பட்டது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதே நடைமுறையை சாதாரண வழக்குகளிலும் பின்பற்றுவீர்களா என்றார். பின்னர் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட ஏதுவாக இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் மார்ச் 8-க்கு தள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here