மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறை இரு கட்சிகளும் 3 தொகுதிகள் கேட்டன. இந்நிலையில் நேற்று அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு முதலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் எம்.பி.தலைமையிலான குழுவினரும், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சம்பத் தலைமையிலான குழுவினரும் அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்கள், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், அடுத்த கட்டமாக பேசி முடிவெடுப்போம் என்று கூறி புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பகல் 12 மணியளவில் அறிவாலயம் வந்தார். தொடர்ந்து, 12.30 மணிக்கு முதலில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் துணை செயலாளர் மு.வீரபாண்டியன், சுப்பராயன் எம்.பி. உள்ளிட்டோர் வந்தனர். 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலினும், முத்தரசனும் கையெழுத்திட தொகுதி பங்கீடு இறுதியானது.
அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த இரா.முத்தரசன், ‘‘மதச்சார்பின்மை கொள்கையை காப்பாற்ற அவசியமும் தேவையும் எழுந்துள்ளது. பாசிச, சர்வாதிகார ஆட்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில்திமுக தலைமையிலான கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது குறித்து பின்னர் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளனர்’’ என்றார்.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள்முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 2 தொகுதிகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியகே.பாலகிருஷ்ணன், ‘‘கூடுதலாக ஒரு தொகுதி கேட்டோம். பல கட்சிகள் இருப்பதாலும், மேலும், கமல்ஹாசன் கட்சி உள்ளிட்டசிலகட்சிகள் வர உள்ளதாலும், எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. தற்போது, 2 தொகுதிகள் ஒதுக்கிஉடன்பாடு ஏற்பட்டது.
அடுத்து பல கட்சிகள்உடன்பாடு ஏற்பட்ட பின் எந்தெந்த தொகுதிகள்என்பது முடிவெடுக்கப்படும். நாங்கள் ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளை வலியுறுத்தியுள்ளோம். கட்சிகள் ஒரே தொகுதிகளை கேட்பதால் நிறுத்தி வைத்துள்ளனர்’’ என்றார்.
அதே நேரம், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதியை ஒதுக்கலாம் என திமுக முடிவெடுத்துள்ளதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இம்முறை கோவைக்கு பதில் தென்காசி அல்லது கன்னியாகுமரி தொகுதியை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.