மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் ஜூலை 15-ம் தேதி இருதரப்பினரும் போராட்டங்களை அறிவித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கர்நாடக அரசை கண்டித்து, ஜூலை 15-ம் தேதி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஓசூர் அருகே தமிழக எல்லையில் இருந்து மேகதாட்டு வரை பேரணி நடத்தப்படும் என, சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், அதே நாளில் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில், மேகேதாட்டில் அணை கட்ட வலியுறுத்தியும், தமிழ் திரைப்படங்களை திரையிட எதிர்ப்பு தெரிவித்தும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட சலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
ஒரே நாளில் இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளிலும் அந்நதந்த மாநில அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.















