97-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வேஸ் – பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
ரயில்வே அணி தரப்பில் ஷிஷே கவுடா 2 கோல்களும் (26, 28-வது நிமிடங்கள்), லவ்பிரீத் சிங் (31-வது நிமிடம்), ஜஸ்விந்தர் சிங் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். பஞ்சாப் நேஷனல் வங்கி அணி சார்பில் நவீன் அன்டில் 3 கோல்களும் (57, 59, 60-வது நிமிடங்கள்), குர்சிம்ரன் சிங் (11-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.
‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் அணியை வீழ்த்தியது. இந்திய கடற்படை அணி சார்பில் பவின் குஷலப்பா (8-வது நிமிடம்), செல்வராஜ் (30-வது நிமிடம்), பவன் ராஜ்பர் (36-வது நிமிடம்), நிதேஷ் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
லீக் சுற்றுகளின் முடிவில் ‘ஏ’ பிரிவில் ரயில்வே அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. இதே பிரிவில் இந்திய ராணுவம் அணி ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றில் கால் பதித்தது. ‘பி’ பிரிவில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அரை இறுதியில் நுழைந்தது. இந்திய கடற்படை அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து
அரை இறுதிக்கு முன்னேறியது.
இன்று ஓய்வு நாளாகும். நாளை (31-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே – இந்திய கடற்படை அணிகள் மோதுகின்றன. 6 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி, இந்திய ராணுவ அணியை எதிர்கொள்கிறது.














