மாக்சிமிலியன் அடித்த சுய கோலால் பிரான்ஸ் வெற்றி | Euro Cup

0
56

யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘டி’ பிரிவில் டசால்டார்ஃப் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் – ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் அட்ரியன் ராபியோட் உதவியுடன் பந்தை பெற்ற பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் பாப்பே பந்தை விரைவாக கடத்திச் சென்று இலக்கை நோக்கி வலுவாக உதைத்தார். ஆனால் ஆஸ்திரியா கோல் கீப்பர் பேட்ரிக் பென்ட்ஸ் இடது புறத்தில் பாய்ந்து கோல் விழவிடாமல் பந்தை தட்டிவிட்டார்.

13-வது நிமிடத்தில் பிரான்ஸின் மார்கஸ் துராம் உதவியுடன் பந்தை பெற்ற தியோ ஹெர்னாண்டஸ் இடது புறத்தில் கடினமான கோணத்தில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்து கோல் கம்பத்தின் வலதுபுறம் விலகிச் சென்றது. 19-வது நிமிடத்தில் அன்டோனி கிரீஸ்மானின் கோல் அடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. அடுத்த நொடியில் கார்னரில் இருந்து கிரீஸ்மான் உதைத்த பந்தை கோல்கம்பத்துக்கு 6 அடி தூரத்தில் நின்ற மார்கஸ் துராம் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். ஆனல் கோல் கம்பத்துக்கு இடது புறம் பந்து விலகிச் சென்றது.

33-வது நிமிடத்தில் கிலியன் பாப்பேவின் கோல் அடிக்கும் முயற்சிதடுக்கப்பட்டது. 36-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பாம்கார்ட்னர், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து இடதுபுறத்தில் தடுக்கப்பட்டது. 38-வதுநிமிடத்தில் கிலியன் பாப்பே ஆஸ்திரியா அணியின் 3 டிபன்டர்களுக்கு போக்கு காட்டி பந்தை பாக்ஸின் மையப்பகுதிக்குள் தள்ளினார். அப்போது அங்கு அன்டோனி கிரீஸ்மானுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த ஆஸ்திரியா வீரர் மாக்சிமிலியன் வோபர் பந்தை தலையால் தட்டி விலக்கி விட முயன்றார். ஆனால் பந்து சுய கோலாக மாறியது. இந்த கோல் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.

55-வது நிமிடத்தில் கிலியன் பாப்பே, கோல் அடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டார். கோல் கீப்பருடன் கிட்டத்தட்ட நேருக்கு நேர் இருந்த நிலையில் பாப்பே அடித்த பந்து வலது புறம் விலகிச் சென்றது. இதன் பின்னர் பிரான்ஸ் பல முறை கோல் கம்பத்தை நோக்கி பந்தை எடுத்துச் சென்றது. ஆனால் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிரான்ஸ் அணியின் வெற்றியில் நடுகள வீரரான என்‘கோலோ கன்டே முக்கிய பங்கு வகித்தார். 2வருடத்துக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர், டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டார். தனது 92 சதவீத பாஸ்களை சரியாக கடத்தியிருந்தார். ஆஸ்திரிய வீரர்களை பதில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கவிடாமல் பார்த்துக் கொண்டதில் கன்டே பிரதான பங்கு வகித்தார்.

பாப்பே காயம்: ஆஸ்திரியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் பாப்பே காயம் அடைந்தார். பந்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது ஆஸ்திரியாவின் கெவின் டன்சோ மீது பாப்பே மோதினார். இதில் அவருக்கு மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர், எஞ்சிய ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது.