பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்திவிராஜ் தொண்டைமான் தேர்வு

0
82

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் ஷாட்கன் பிரிவில் பங்கேற்கும் 5 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 36 வயதான பிருத்திவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றுள்ளார். இவர், ஆடவருக்கான டிராப் பிரிவில் பங்கேற்க உள்ளார்.

பிருத்திவிராஜ் தொண்டைமானுடன் இந்திய அணியில் ராஜேஷ்வரி குமாரி (மகளிர் டிராப்), அனந்த்ஜீத் சிங் நருகா (ஆடவர் ஸ்கீட்), ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான் (மகளிர் ஸ்கீட்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அனந்த்ஜீத் சிங் நருகா, மகேஸ்வரி சவுகான் ஆகியோர் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பிருத்திவிராஜ் தொண்டைமான் (36), 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட நிலையில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

பிருத்திவிராஜ் தொண்டைமான் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வது பெருமை அளிக்கிறது. நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். ஐரோப்பாவில் பயிற்சி பெற தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜகோபால் தொண்டைமான் – திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மகன் பிருத்திவிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.