மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி சியாமளா (55). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் வெளியூரில் உள்ளனர். பாஸ்கரன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சியாமளா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 13) சியாமளாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். உறவினருடன் வந்த குழந்தை படுக்கையறைக்குள் சென்றது. அப்போது அறைக்குள் ஏதோ ஊர்ந்து செல்வதைப் பார்த்த குழந்தை பாம்பு என்று கூறிச் சத்தமிட்டது. குழந்தையின் சத்தம் கேட்டு அறையில் சியாமளா பார்த்தபோது பீரோவின் அடியில் பாம்பு சென்று பதுங்கியதைக் கண்டனர்.
உடனே சியாமளா குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு சிறப்பு அலுவலர் ஜெகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடம் சென்று வீட்டுப் பீரோவின் அடியில் பதுங்கியிருந்த பாம்பைப் பிடித்தனர். பின்னர் அதை சாக்குப்பையில் கட்டி அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டுவிட்டனர்.