மேசடோனியா: கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0
35

தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று, “வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் உள்ள ஓர் இரவு விடுதியில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த இரவு விடுதி தலைநகர் ஸ்கோப்ஜேவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது. விபத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்.” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து மேசடோனியா அரசுத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.

முதற்கட்ட விசாரணையில், இரவு விடுதியில் ஏடிஎன் என்ற பிரபல ஹிப் ஹாப் இசைக் குழு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது. அதில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தீயைக் கொண்டு சில சாகசங்கள் நிகழ்த்தியுள்ளனர். அதிலிருந்தே நெருப்பு அரங்கின் மேற்கூரையில் பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து குறித்த தீவிர விசாரணைக்குப் பின்னரே காரணம் உறுதியாகத் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here