உயிரைக் குடிக்கும் விஷச் சாராயம்: எப்படி கிடைக்கிறது மெத்தனால்?

0
63

50-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி சாராயத்தின் தன்மை குறித்து மருத்துவர்களிடையே விசாரித்தபோது, “அரசு அனுமதியின்றி பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தி காய்ச்சி, வடிகட்டி குடித்தால் அது கள்ளச் சாராயம். அதில் போதைக்காக மெத்தனால் கலந்தால் விஷச் சாராயமாகி விடுகிறது.

இது தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்து விடும். நரம்பு மண்டலம் வழியாக ஊடுருவும் மெத்தனால் மூளையை பாதித்து மூளையின் செல்களை அழித்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

வயிற்றுக்குள் இந்த விஷச் சாராயம் சென்றவுடன் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றும். ஆனால், அடுத்த சில நொடிகளில் வயிறும், குடலும் வெந்து விடும். மெத்தனால் கலந்த சாராயம் குடித்தால் நுரை நுரையாக வாந்தி வருவதுண்டு. அந்த வாந்தி நுரையீரலுக்கு செல்வதால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும்” என்றனர்.

எப்படி கிடைக்கிறது மெத்தனால்? “ஒரு தொழிற்சாலையில் எவ்வளவு மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது? எவ்வளவு இருப்பு உள்ளது? மெத்தனால் பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தின் காலக்கெடு என்ன? – இதுபோன்ற விவரங்களை தொழிற்சாலைகள் கட்டாயம் பராமரிக்க வேண்டும் என்ற நடைமுறை சட்டத்திட்டங்கள் உண்டு.

இதையும் மீறி சாராய வியாபாரிகளுக்கு தடையின்றி மெத்தனால் கிடைக்கிறது. எந்த தொழிற்சாலையில் மெத்தனால் கிடைக்கும் என சாராய வியாபாரிகள் அறிந்து வைத்துள்ளனர். அந்த தொழிற்சாலை உரிமையாளரிடமோ, அங்கு பணியாற்றுபவர்களிடமோ கூட்டணி அமைத்து இந்த மெத்தனாலை தரகர்கள் பெறுகின்றனர். பின்னர் அதிக பணம் மூலம் சாராய வியாபாரிகளுக்கு விற்கின்றனர்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சம்பவத்துக்குப் பின்னராவது மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். ரூ.50 லட்சம் செலவழித்து இம்மருந்தை வாங்கி வைத்திருந்தால் பல பேர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இனியாவது அரசு இவைகளை, அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைப்பது அவசியம்” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மளிகை வாங்குவதாக சொல்லிச் சென்று…கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் கள்ளக்குறிச்சி கவரைத் தெருவைச் சேர்ந்தவர். இவரது மனைவி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தனது கணவரை அனுமதித்து விட்டு, கண்ணீர் மல்க பெருங்கூட்டத்துக்கு நடுவே நின்றிருந்தார்.

“சம்பவத்தன்று (ஜூன் 18) என்னுடன் வந்த என் கணவர், ‘சற்று நில்.. மளிகை வாங்கி வருகிறேன்; சேர்ந்து வீட்டுக்கு போகலாம்’ என்று கூறி விட்டு, இந்த கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார். அது தெரியாமலேயே நானும் அவருடன் வீட்டுக்கு வந்தேன்.

பாதிப்பு அதிகமாகி, ‘அடி வயிறு வலிக்கிறது; பார்வை மங்கலாகி வருகிறது’ என்று சொல்லவே, இங்கே அழைத்து வந்து சேர்த்தேன்” என்று கண்ணீர் பெருக கூறினார். இது போன்ற பல கதைகளுடன் நிறைய பேரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் காண முடிந்தது.