கச்சத் தீவு திருவிழாவைப் புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த தாக, பிப்ரவரி 3-ம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இந்த வழக்கு விசாரணை, இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி கஜ நிதி பாலன், 20 மீனவர்களை விடுதலை செய்தும், 2-வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்தார்.
மீனவர்களுக்கு இலங்கை அரசு சிறைத் தண்டனை விதித்ததைக் கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் ராமேசுவரத்தில் விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை பிப்.17-ம் தேதி தொடங்கினர். தொடர்ந்து, ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தப் பட்டிருந்த 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கருப்புக் கொடி கட்டி, மீனவர்கள் நேற்று 2-ம் நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பிப்ரவரி 23, 24 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கப்போவதாக ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.