திமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

0
228

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவுகிறது. இதில் திமுகவை பொறுத்தவரை, மநீம கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. அத்துடன், தங்களின் தொகுதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் கட்சிகளிடம் தெரிவித்துவிட்டது.

அடுத்த பேச்சுவார்த்தையில் பங்கீட்டை முடித்து, இம்மாத இறுதிக்குள் வேட்பாளரையும் அறிவிக்கும் முயற்சியில் திமுக உள்ளது. இம்முறை, கூட்டணி கட்சிகளை தவிர்த்து 25 தொகுதிகளில் நேரடியாக தங்கள் வேட்பாளர்ளை களமிறக்க திமுக முடிவெடுத்துள்ளது.

இதை மனதில் வைத்தே, திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் மற்ற கட்சிகளுடன் பேசியுள்ளனர். மேலும், திமுகவை பொறுத்தவரை முன்கூட்டியே உளவுத்துறை மற்றும் தனியார் அமைப்புகளின் மூலம் கள நிலவரத்தையும் கேட்டு பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் திமுகவுக்கு சாதகமான தொகுதிகள் இனம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் மாறுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில், திமுக தலைமை ஏற்கெனவே அறிவித்தபடி, திமுக வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்ப மனு படிவங்கள் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர், ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து, மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அறிவாலயத்தில் இன்று காலை முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here