ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

0
41

மும்பை தாக்குதலில் தொட்புடைய ஹபீஸ் சயீது கூட்டாளியும் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தீவிரவாதியுமான அபு கத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் அபு கத்தல். இவருடைய உண்மையான பெயர் ஜியா-உர்-ரஹ்மான். இந்தியாவால் தேடப்படும் முக்கிய தீவிரவாதிகள் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார். 26/11மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

இவர் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2002-03 காலகட்டத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிய அபு, பூஞ்ச்-ரஜவுரி பகுதியிலிருந்தபடி செயல்பட்டதாக என்ஐஏ குற்றம் சாட்டி உள்ளது.

இந்நிலையில், அபு கத்தல் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பாகிஸ்தானின் ஜீலம் பகுதியில் பயணம் செய்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி விட்டனர். இதில் அபு கத்தல் மற்றும் அவருடைய பாதுகாவல் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பாதுகாவல் வீரர் படுகாயமடைந்துள்ளார். அபு கத்தல் மறைவு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களின் செயல்பாட்டை மறைப்பதற்காக, பீப்புள்ஸ் ஆன்ட்டி-பாசிஸ்ட் படை (பிஏஎப்எப்) மற்றும் தி ரெசிஸ்டன்ட் படை (டிஆர்எப்) ஆகிய 2 அமைப்புகளை அபு கத்தல் உருவாக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு ஜுன் 9-ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள சிவ கோரி கோயிலில் இருந்து சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் பஸ்ஸில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் அபு கத்தலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிஏஎப்எப் அமைப்பு தீவிரவாத இயக்கம் என மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here