குளச்சல் அருகே கடியப்பட்டணம் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் மரியா சிகாமணி மகன் ரோகின் எம் மரியா (36). இவருக்கு கார்மல் நிதிதா என்ற மனைவியும் 11 மாதங்களில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரோகின் எம் மரியா பஹ்ரைன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பைக்கில் அவர் மனைவியின் ஊரான குளச்சலுக்குச் சென்றார். ஆனால் பின்னர் அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை.
இதற்கு இடையே இன்று (26-ம் தேதி) காலை குளச்சல் அருகே சைமன் காலனி பாலம் அருகே உள்ள கால்வாயில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் உடலுக்கு அருகே பைக் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் ரோகின் எம் மரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் இறந்திருக்கிறார் என்று தெரிகிறது. எனினும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.