அமைச்சர் உதயநிதியிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை தொகுதியில் சீட் பெற திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் காய் நகர்த்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில், கடந்த முறையைவிட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறை எப்படியாவது சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் கடந்த ஜன.29-ம் தேதி நடைபெற்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதே நேரம், இந்த முறை கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏகள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் ஆகியோர் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால் சிவகங்கை தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இத்தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கும் பட்சத்தில், எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி மகன் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணா சங்கீதா உள்ளிட்டோர் முயன்று வருகின்றனர். அதேபோல் செய்தி தொடர்பு மாநில இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ராமநாதபுரம் அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
அந்த வரிசையில் காரைக்குடியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பனும் சிவகங்கை தொகுதியை குறி வைத்துள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் கருப்பு, சிவப்பு வேட்டி கட்டாத திமுக-காரர் என்று அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியிடம் உள்ள நெருக்கத்தில் எப்படியும் சிவகங்கை தொகுதியில் சீட் வாங்கி விடலாம் என கரு.பழனியப்பன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.