“பயங்கரவாதத்தின் வேர், மூளை எங்கிருந்தாலும் பாஜக அழிக்கும்” – அண்ணாமலை உறுதி

0
343

பயங்கரவாதம் எங்கு இருந்தாலும், அதை பாஜக அழிக்கும் என கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், வி.ஹெச்.பி மாநில செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களின் புகைப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. கோவை உக்கடத்தில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி நடந்த தாக்குதலை திமுகவினர் சிலிண்டர் வெடிப்பு என்றார்கள். கோவை பாதுகாப்பாக இருக்க வேண்டும். வரும் மக்களவை தேர்தல் கோவையின் பாதுகாப்புக்கான தேர்தல். தமிழகத்தில் மக்களுக்காக சேவை செய்கிறோம் என்று கூறும் கட்சிகள் ஒரே குரலில் குண்டு வெடிப்பு கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் வரும் தேர்தலில் வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.புரத்தில் நினைவுத் தூண் அமைக்கப்படும். கோவையை பாதுகாக்க என்.ஐ.ஏ. 2-வது அலுவலகம் கோவைக்கு கொண்டுவரப்படும். பயங்கரவாத வேர், மூளை எங்கு இருந்தாலும் அதை பாஜக அழிக்கும். 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு, கோவையை 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றது. 2022-ம் ஆண்டு தாக்குதல் 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு மோடி தேவை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here