கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் ஐபிஎஸ் இருந்த நிலையில், அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த அன்சுல் நாகர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு புதிய பணியிடம் எதுவும் ஒதுக்கப்படாத நிலையில், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் எப்போதுமே ஆட்சி மாற்றம் ஏற்படும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்வார்கள். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதும், புதிய பொறுப்புகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறும். கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்தபோதும் இதேபோன்ற உத்தரவுகள் வந்தன. தலைமை செயலாளர் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல அதிகாரிகள் மாற்றப்பட்டு இருந்தனர்.
தவெக ஆட்சி அமைந்தபோது உடனடியாக அனைத்து அதிகாரிகளும் மாற்றப்படவில்லை என்றாலும் சில நாட்களிலேயே அதிகாரிகள் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வந்தனர். துறை ரீதியான செயலாளர்கள் தொடங்கி ஐஏஎஸ், ஐபிஎஸ் வரை பல்வேறு தரப்பினரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முதலில்
சமீபத்தில் கூட பல்வேறு ஏஐஎஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். வருவாய் நிர்வாக ஆணையராக சந்திரமோகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா என பல மாற்றங்கள் செய்யப்பட்டனர். இதற்கிடையே இப்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனர் அன்சுல் நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் செயலாளர் மணிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக இருந்த ஸ்டாலின் ஐபிஎஸ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.. அதேநேரத்தில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு தற்போது புதிய பணியிடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு செல்வது உறுதியாகியுள்ளது.
அவர் எதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஒரு தரப்பினர் பெண்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் கனிமவள கடத்தலுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்ததாகவும் இதன் காரணமாகவே பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.














