இளநிலை மருத்துவ படிப்புக்கானநீட் தேர்வு முடிவை ரத்துசெய்ய உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 23 லட்சத்து 33,297 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது.
இதில் மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும் இதுவரை இல்லாத அளவில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். நேரக் குறைபாடு சிக்கல்களை முன்வைத்து 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.மேலும் பிஹாரில் உள்ள சில மையங்களில் வினாத்தாள் கசிந்ததாகவும் தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது. அதன்படி நீட் மறுத்தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 813 பேர் மட்டுமே எழுதினர். அதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டன.
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக முடிவுகளை மாணவர்களின் அடையாளங்களை மறைத்து நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக என்டிஏ கடந்த வாரம் வெளியிட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் நேற்று இடைக்கால உத்தரவு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: என்டிஏ தாக்கல் செய்த ஆவணங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, தேர்வு நடைமுறைகளின் புனிதத்தன்மை திட்டமிட்டு மீறப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வர ஆதாரங்கள் இல்லை.
மேலும் நீட் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட்டால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறு தேர்வு கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
எனினும், இது தொடர்பாக டெல்லி ஐஐடி வழங்கியுள்ள அறிக்கையை ஏற்கிறோம். இதன்படி, வெற்றி பெற்ற 13 லட்சம் மாணவர்களின் தரவரிசையை என்டிஏ மாற்றி அமைக்க வேண்டும்.