மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு பல சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை முன்கூட்டியே உணர்த்தும் வகையில்ஆந்திராவின் பிரபல கைத்தறி பருத்தி ஜவுளிகளில் ஒன்றான மங்களகிரி சேலையை அமைச்சர் நிர்மலா உடுத்தியிருந்தார். தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்த அமைச்சர் நிர்மலா, ஆந்திராவின் மருமகள். இவரது கணவர் பாரகலா பிரபாகர்.
நிர்மலாவின் கைத்தறி சேலை, சற்றே மங்கலான வெள்ளை நிறத்தில் பெரிய கட்டங்களுடனான வடிவத்தில் இருந்தது. இதன் எதிர்மறை நிறமாக வயலட்டில் சேலைஓரங்கள் இருந்தன. ஜொலிக்கும் பட்டு ஜவுளியிலான இந்த சேலையின் முந்தானை பலவேலைப்பாடுகளுடன் கண்ணை கவரும்வகையில் இருந்தது. மத்திய அமைச்சர்நிர்மலா தனது உடையில், இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களை முன்னிறுத்தியதாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. அமைதி, நல்லிணக்கம் மற்றும் இந்தியக் கலாச்சாரத்தின் புதிய தொடக்கம் ஆகியவற்றை காட்டும் வெள்ளை நிறம் முக்கிய இடம் பிடித்திருந்தது. கைத்தறி நெசவை சுட்டிக்காட்ட வயலட் நிறமும் இருந்தது.பல்வேறு வகை சேலைகள் கட்டுவதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவராக நிர்மலா வடமாநில மக்கள் மத்தியில் கருதப்படுகிறார். கடந்த 6 பட்ஜெட் தாக்கலின்போதும் அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கைத்தறி பட்டு சேலைகளை உடுத்தியிருந்தார். இதனால் அவரது உடைகள் 2019 முதல் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் சிறப்பு கவனம் பெற்று பேசப்படுகிறது.டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் முன் அமைச்சர் நிர்மலா பத்திரிகையாளர்களுக்கான புகைப்படத்திற்காக நேற்று தோன்றினார். அப்போது அவரது கைகளில் பட்ஜெட் விவரங்கள் கொண்ட டேப்லெட் அடங்கிய சிவப்பு நிற உறை இருந்தது. 2019-ல் வழக்கமான காகித பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா 2021-ல் டிஜிட்டல் பட்ஜெட்டுக்கு மாறினார். முதல்முறையாக அப்போது டேப்லெட் பயன்படுத்தப்பட்டது.
பட்ஜெட் தாக்கலுக்கு முன் வழக்கமாக தனது இணை அமைச்சருடன் பத்திரிகையாளர்கள் முன் தோன்றும் நிர்மலா, இந்த முறை, இணை அமைச்சர் மட்டுமின்றி பட்ஜெட் தயாரிப்பு குழு அதிகாரிகளுடனும் வந்தார். இது பத்திரிகையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. பிறகு இந்தியாவின் மரபையும், மாண்பையும் காக்கும் வகையில் அமைச்சர் நிர்மலா நேராக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று வந்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பட்ஜெட் தயாரிப்புக் குழு அதிகாரிகளுடன் சந்தித்த நிர்மலா, பட்ஜெட் சிறப்புகளை எடுத்துரைத்தார். அப்போது குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துகளையும், ஆசிகளையும் குழுவினருக்கு வழங்கினார்.
கடந்த வருடம் போலவே இந்த முறையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சர்க்கரை கலந்த தயிரை அமைச்சருக்கு அன்புடன் ஸ்பூனில் ஊட்டி மகிழ்ந்தார். இந்த உணவு வடமாநில வழக்கமாகும். நல்ல காரியங்களுக்கு செல்பவர்கள் வெற்றிபெற ஆசிர்வதித்து வழங்குவதாகும்.