கடந்த 13 ஆண்டுகளாக இந்தி மொழியையும் இந்திய கலாச்சாரத்தையும் கற்றுவந்த ஜப்பானிய இணையதள பெண் பிரபலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் தனது முதல் புனித நீராடலை மேற்கொண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்தியக் கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் அறிந்துகொள்வதில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக வாராணசி, ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் போன்ற புனிதத் தலங்களை நோக்கி அவர்கள் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 13 ஆண்டுகளாக இந்தி மொழியையும் இந்திய கலாச்சாரத்தையும் கற்றுவந்த மாயோ ஜப்பான் என்ற ஜப்பானிய இணையதள பெண் பிரபலம், சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் தனது முதல் புனித நீராடலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
பாரம்பரிய இந்திய உடையில் கங்கைக்கரைக்கு வந்த அவர் நீராடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து, “13 ஆண்டு கால கற்றலுக்குப் பிறகு இறுதியாக கங்கையில் புனித நீராடிவிட்டேன்; என் வாழ்க்கையில் எதிர்பாராத அழகான பயணங்களை சாத்தியமாக்கிய இந்தியாவுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.














