ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் மாலை 6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைதிகள், தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதரத்துக்காக பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்துவிட்டு, மாலையில் சிறைக்கு திரும்ப அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறை, ஹசாரிபாகில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் மத்திய சிறை, கிழக்கு சிங்பூமில் உள்ள ககிடிஹ் மத்திய சிறை மற்றும் தும்பா மத்திய சிறை ஆகிய 4 மத்திய சிறைகளில் உள்ள திறந்த மற்றும் பகுதியளவு திறந்த முகாம்கள் மூலம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இத்திட்டம் அனைத்து கைதிகளுக்குமானதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட சில கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும்.
சிறைத்துறை ஐ.ஜி. சுதர்ஷன் மண்டல் கூறும்போது, “திறந்த அல்லது பகுதியளவு திறந்த கைதிகள் தங்கும் அறை அமைப்பின் கீழ், கைதிகள் காலை 6 அல்லது 7 மணியளவில் வெளியே சென்று வேலை செய்து, தங்கள் குடும்பங்களுக்காகச் சம்பாதித்து, சுமார் 12 மணி நேரத்துக்குப் பிறகு சிறைக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இந்த வசதி நகர்ப்புற மையங்களில் இருப்பதால், கைதிகளுக்கு வாழ்வாதாரம் ஈட்ட நியாயமான வாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் திட்டத்துக்கு தகுதியானவர்களை தீர்மானிக்க, ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை வகுக்கப்படும். நன்னடத்தை மற்றும் சிறை விதிகளைக் கடைப்பிடித்தல் ஆகியவை முக்கியத் தகுதி அளவுகோல்களில் அடங்கும்” என்றார்.
இதுகுறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கைதிகள் வெளியில் சென்று பணிபுரிய அனுமதிக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இது, சிறைகளில் சீர்திருத்தங்களை வலுப்படுத்தவும், கைதிகள் மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைவதற்கு உதவவும் மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்” என்றார்.














