இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டன்

0
401

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேமி ஓவர்டன் 3 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்திருந்தார்.

ஜேமி ஓவர்டன் கடந்த 2022-ம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில் ஜேமி ஓவர்டன் களமிறங்கி 97 ரன்கள் விளாசி அசத்தினார். அவர், 7-வது விக்கெட்டுக்கு ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்து 241 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சில ஆட்டங்களில் விளையாடி இருந்தார். இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடினார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகியிருந்தார். தற்போது டெஸ்ட் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், ஆலி போப், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர், கிறிஸ் வோக்ஸ்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here