அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஜெய்ஸ்ரீராம், முருகனுக்கு அரோகரோ என முதல்வர் ஸ்டாலின் சொல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தென்னிந்திய மீனவர் பேரவை தலைவர் ஜெய பாலையன் தலைமையில், துணைத் தலைவர்கள் ராம், கஜபதி மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் பாஜகவில் நேற்று இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:தமிழக மீனவர்கள் பிரச்சினைதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து பல்வேறு கோரிக்கைளைவழங்கினோம். இந்திய வெளியுறவுத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள், இலங்கை வெளியுறவுத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சந்திப்பு விரைவில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழக மீனவ சங்கங்கள், இலங்கை மீனவ சங்கங்கள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவர உள்ள வக்பு வாரிய சட்டம் 1995 திருத்த சட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. நாட்டில் ராணுவம், ரயில்வேக்கு பிறகு அதிகளவு சொத்துகள் வைத்துள்ள அமைப்பாக வக்பு வாரியம் உள்ளது. வக்பு வாரியத்திடம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 9.4 லட்சம் ஏக்கர் சொத்துகள் உள்ளன. திருச்சி திருச்செந்துறை கிராமமே வக்பு வாரியத்தின் சொத்து என்று சொல்கிறார்கள்.
அங்குள்ள 1,500 ஆண்டுகள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் சொத்து எப்படி, வக்பு வாரியத்தின் சொத்துக்குள் வரமுடியும். தற்போதைய திருத்தசட்டம் வக்பு வாரியம் சொத்துகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் தான் பதிவு செய்ய வேண்டும் எனகூறுகிறது. இந்த சட்டம், இஸ்லாமியர்களுக்கும் நல்ல விஷயமாக இருக்கும். எஸ்சி., எஸ்டி உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழகஅரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தில் முதல்வர் கோப்பை போட்டி 3 பிரிவுகள் கொண்டதாக நடத்த வேண்டும்.
தமிழக அமைச்சர்கள் மீதானசொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தவறுசெய்தவர்கள், மீண்டும் பொறுப்புக்கு வராத வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் தமிழக காவல்துறையை பாராட்டுகிறேன். யாராக இருந்தாலும் கைது செய்கிறார்கள். இது நம்பிக்கையை தருகிறது.
தமிழக அமைச்சர் ஒருவர் தற்போதைய சமூக நீதி ஆட்சி ராமர் காலம் போல் இருப்பதாக கூறுகிறார். திமுக சொல்லும் கடவுள் மறுப்பு கொள்கை இனி வேலைக்கு ஆகாது என நினைத்துவிட்டார்கள். பாஜக நடவடிக்கை காரணமாக திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலுக்குமுன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஜெய்ஸ்ரீராம், முருகனுக்கு அரோகரா’ என்று கூட சொல்வார். வங்கதேசம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுடன் நேர்கோட்டில் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இவ்வாறு கூறினார்.